தென்மாவட்ட மக்களின் தேவைகளின் தேவைகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு 1996ம் ஆண்டில் திருநெல்வேலியில் அரசு சட்டக்கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது. இந்தக்கல்லூரியானது தமிழ்நாடு முனைவர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டு சட்டக்கல்வியைக் கற்பிக்கிறது. இந்தக்கல்லூரியானது ஆரம்பத்தில் மூன்றாண்டு எல்.எல்.பி பட்டப்படிப்பினை மட்டுமே மாணவர்களுக்கு வழங்கி வந்தது.

பேராசிரியர் A.சந்திரசேகரன், M.L., என்பவர் திருநெல்வேலி அரசு சட்டக்கல்லூரியில் உள்கட்டமைப்பை நிறைவு செய்யும்பொருட்டு அரசினால் சிறப்பு தனி அலுவலராக நியமிக்கப்பட்டார்.

அரசு மருத்துவக் கல்வித் துறைக்குச் சொந்தமான பொன்னுசாமி பிள்ளை பங்களாவில் கல்லூரி செயல்படத்தொடங்கியது. 1997-1998 ம் கல்வியாண்டு முதல் சென்னை தமிழ்நாடு முனைவர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டது. அதே கல்வியாண்டில் மூன்றாண்டு எல்.எல்.பி பட்டப்படிப்பு மாலைநேர வகுப்பு அறிமுகப்படுத்தப்பட்டது.

இக்கல்லூரியானது திருச்செந்தூர் -தூத்துக்குடி நெடுஞ்சாலையில் உள்ள மாவட்ட நீதிமன்றக் கட்டிடங்களை ஒட்டிய 15 ஏக்கர் பரப்பளவில் சொந்தக்கட்டிடத்தில் அக்டோபர் 2000 முதல் செயல்படத் தொடங்கியது.

1999-2000 ஆம் கல்வியாண்டிலிருந்து இந்திய பார் கவுன்சில் வழிகாட்டுதலின்படி மூன்றாண்டு எல்.எல்.பி பட்டப்படிப்பு மாலைநேர வகுப்பு நிறுத்தப்பட்டு, 2000-2001 ஆம் கல்வியாண்டிலிருந்து முழுநேர ஐந்தாண்டு பி.எ.எல்.எல்.பி பட்டப்படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்திய பார் கவுன்சில் வழிகாட்டுதலின்படி 2002-2003 ஆம் கல்வியாண்டிலிருந்து ஐந்தாண்டு பி.எ.எல்.எல்.பி பட்டப்படிப்பு மற்றும் மூன்றாண்டு எல்.எல்.பி பட்டப்படிப்பிற்கு பருவ முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அரசியலமைப்புச் சட்டம் மற்றும் மனித உரிமைகள் சட்டத்தில் எல்.எல்.எம் பட்டப்படிப்பு தொடங்கப்பட்ட 2007ஆம் ஆண்டு இக்கல்லூரியின் வரலாற்றில் மற்றொரு மைல்கல்லாக அமைந்தது. மேலும் 2022-2023ஆம் ஆண்டு முதல் எல்.எல்.எம் இல் வணிகச்சட்டம் என மற்றொரு பிரிவு ஆரம்பிக்கப்பட்டது.